Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: பிரதமர் மோடி உறுதி

மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: பிரதமர் மோடி உறுதிடெல்லியில் நேற்று நடைபெற்ற ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவது பற்றி மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்றார் மோடி.
இந்திய சுதந்திரத்துக்குப்பின் நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 1950-ம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசால் திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த குழுவை, மோடி தலைமையிலான மத்திய அரசு கலைத்துவிட்டது.
இதற்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. பிரதமரை தலைவராக கொண்ட இந்த அமைப்பின் துணைத்தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பில் மாநிலங்களுக்கு அதிகார பகிர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் 2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட், வரும் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், மாநிலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்க மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்ற மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) முதலாவது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:
திட்ட அமலாக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்களை முதல்வர்கள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்காத காரணத்தால் பல்வேறு திட்டங்களும் அடிக்கடி நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, திட்டங்களைத் தாமதப்படுத்தும் விஷயங்கள் மீதும் முதல்வர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நம்மிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து, முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். அனைத்து மாநிலங்களும் சீரான வளர்ச்சியை அடையாமல் இந்தியா முன்னேற முடியாது. "அனைவருக்குமான வளர்ச்சி' என்ற உணர்வுடன் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு வருவதே நோக்கமாகும். நிலுவையில் உள்ள பிரச்னைகளைக் கண்காணித்து தீர்வுகாண ஒவ்வொரு மாநிலமும் ஓர் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கும், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு மாநிலமும் தலா இரண்டு நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும். நாட்டில் சோசலிஸ சகாப்த காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைக் குழுவானது ஒத்துழைப்பு சார்ந்த கூட்டாட்சி மாதிரியை உருவாக்கும்.
"குழு இந்தியா' (டீம் இந்தியா) என்பது போல் இணைந்து செயல்படுவதற்காக, மத்திய அரசுடன் மாநில முதல்வர்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இன்றைய நமது சந்திப்பானது, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திறனைக் கொண்டுள்ளது.
உலக நாடுகள் தற்போது இந்தியாவை மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன. எனினும், ஏழ்மை ஒழிப்பு என்பது இன்னமும் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. வளர்ச்சி ஏற்படாமல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியாது; ஏழ்மையையும் ஒழிக்க முடியாது. எனவே, முதல்கட்டமாக, அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை எட்ட நாம் இலக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிர்வாக ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்காக ஓர் இணையதளத்தை உருவாக்கி, மாநிலங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தியப் பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளில் சந்தைப் பொருளாதாரமாக தன்னைத் தானே மாற்றிக் கொண்டுள்ளது. எனவே, திட்டமிடல் நடவடிக்கைகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் (முதல்வர்கள், பொருளாதார நிபுணர்கள்) பேச வேண்டும்.
நல்லாட்சி மீது நாம் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவையாகும். நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நன்கு சிந்தித்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதை நல்ல முறையில் அமல்படுத்த வேண்டும் என்றார் மோடி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டத்தில் மோடி கூறிய கருத்துகள் அனைத்தும் நிர்வாக நடைமுறை தொடர்புடையவை. வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகள், ஏழ்மை ஒழிப்பு, அதிகாரப்பரவல், திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதமின்மை ஆகியவையே முன்னுரிமைத் திட்டங்கள் என்று பிரதமர் தெரிவித்தார் என்றார் ஜேட்லி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். எனினும், பிகாரில் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி இதில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் (தமிழ்நாடு), அகிலேஷ் யாதவ் (உத்தரப்பிரதேசம்), தருண் கோகோய் (அஸ்ஸாம்), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), உம்மன் சாண்டி (கேரளம்), வீரபத்ர சிங் (ஹிமாசலப் பிரதேசம்) ஆகிய முதல்வர்களும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அரவிந்த் பானாகரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
66 திட்டங்களுக்கு மறு ஆய்வு; மத்திய அரசின் நிதியுதவியுடன் 66 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக 2014-15ம் நிதியாண்டில் ரூ.3,38,562 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த 66 திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்ய, மத்திய கொள்கைக் குழுவின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். இவற்றில் எந்தெந்த திட்டங்களைத் தொடர்வது, எவற்றை மாநிலங்களுக்கு மாற்றுவது, எந்தத் திட்டங்களைக் கைவிடுவது என்று பரிந்துரை செய்ய வேண்டியது இக்குழுவின் பொறுப்பாகும்.
இதேபோல், மேலும் இரு குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களில் திறன் மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு குழு பணியாற்றும். மற்றொரு குழுவானது, தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளைக் கவனிக்கும்.

  Source : justknow.in
Post Date : 09-02-15
Total Visitors : 14
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments