Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

   கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்; காங்கிறஸ்-ஜேடிஎஸ் கடும் எதிர்ப்பு; பெங்களூரில் போலீஸ் குவிப்பு

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்; காங்கிறஸ்-ஜேடிஎஸ் கடும் எதிர்ப்பு; பெங்களூரில் போலீஸ் குவிப்பு கர்நாடகா முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார். ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏ.க்கள் இருக்கவேண்டும் என்ற நிலையில் தனி மெஜாரிட்டியாக 104 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் பாஜக இன்று கர்நாடகாவில் ஆட்சியமைத்தது. கர்நாடக முதல்வராக 3-வது முறையாக பதவியேற்கும் எடியூரப்பா நேற்று இரவு துவங்கி விடிய விடிய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் உச்சநீதிமன்றம் எடியூரப்பா முதல்வராவதை தடுக்க முடியாது எனக்கூறிய பின்பு அவசர கதியில் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை. பாஜகவின் முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. சில மத்திய அமைச்சர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்று விழாவை அலங்கரித்தனர்.
கர்நாடக அரசியலில் நேற்று விடிய விடிய பல்வேறு திருப்பங்கள், பரபரப்புக் காட்சிகள் பெங்களூரில் அரங்கேற அது டெல்லியிலும் எதிரொலித்தது. நேற்று இரவு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க அழைத்ததன் விளைவாக உச்சநீதிமன்றம் நள்ளிரவு செயல்படத்துவங்கியது. பாஜகவுவை ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனுதாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றப் பதிவாளரை நாடிய காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள், ‘நாளை (இன்று) காலை 9 மணிக்கு எடியூரப்பாவை பதவியேற்க அழைத்திருக்கிறார் கர்நாடக ஆளுநர். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. உடனடியாக தடை விதிக்க வேண்டும். நாங்கள் மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
நள்ளிரவு 12 மணிக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரி கார்டுகளால் அவர் வீட்டைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனவே இரவே இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறார் என்பது உறுதியாக அனைத்து முக்கிய ஊடகங்களும் தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசலில் குவிந்தன.
உச்ச நீதிமன்றப் பதிவாளர் காங்கிரஸ்- மஜத தலைவர்களின் அவசர மனுவை கையோடு எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டுக்கு விரைந்தார். 12.30 மணியளவில் அவர் தலைமை நீதிபதியின் வீட்டை அடைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவைதான் அவர் தீபக் மிஸ்ரா வீட்டுக்கு எடுத்து வந்திருந்தார். அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன்படி ஆளுநர் எடியூரப்பாவை முதல்வர் பதவி ஏற்க அழைத்தது சட்டத்துக்கு முரணான செயல் என்பது உள்ளிட்ட விரிவான மனுவாக அது இருந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டில் சுமார் அரைமணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் இரவு 1.15 மணி வாக்கில் இம்மனுவை ஏற்றதாக அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், காப்டே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஊடகத்தினரும் வழக்கறிஞர்களும் குவிந்தனர். காங்கிரஸ், மஜத சார்பில் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இரவு ஒன்றரை மணிக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார். அரசு சார்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
இரவு 2 மணி வாக்கில் இந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கியது. “தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட கூட்டணியான காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், பெரும்பான்மை இல்லாத தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு. ஆளுநரின் அழைப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்பது கோவா, மணிப்பூர், உபி, ஜார்க்கண்ட், டெல்லி என்று பல மாநிலங்களில் இதற்கு முன் நடந்துள்ளது. மேலும் மெஜாரிட்டியே இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து 15 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளதன் மூலம் ஆளுநர் பெரிய தவறு செய்திருக்கிறார்.
சர்க்காரியா கமிஷனின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளுநர் செயல்படவில்லை.எனவே ஆளுநர் எடியூரப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று வாதிட்டார்.
மேலும், ‘’ஆளுநரின் இந்த அழைப்பு மற்றும்15 நாள் அவகாசம் மூலம் குதிரை பேரத்துக்கு வழி தொடங்கிவிட்டது. அது குதிரை வியாபாரம் அல்ல. குதிரை வியாபாரம் என்று சொல்லி குதிரைகளை அவமதிக்க விரும்பவில்லை. இது மனித வியாபாரம். கர்நாடகாவில் ஆளுநரின் உத்தரவால் மனித வியாபாரம் நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதற்கு பதில் அளித்து வாதாடுகையில், “ஆளுநரின் உத்தரவை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.
ஆனால் குறுக்கிட்ட அபிஷேக் சிங்வி, ‘’எத்தனையோ வழக்குகளில் ஆளுநர்கள் விதித்த 356 உத்தரவுகளே திருத்தப்பட்டுள்ளன’’ என்று பதில் அளித்தார்.
மேலும், “இரவு 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்தே இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை புரிகிறது. இந்த விசாரணை என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி.
இந்த விசாரணை முடியும் வரை பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும். பதவியேற்பு நிகழ்வை நாளைக்கு (மே 18)க்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்று வாதங்களை வைத்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகியோரைப் பார்த்து நீதிபதி ஏகே சிக்ரி ‘’குமாரசாமி தனக்கான 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுப் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கும்போது, எடியூரப்பா பின் எவ்வாறு மெஜாரிட்டியான 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சொல்ல முடியும்?’’என்று கேட்க, ‘அதை சட்டமன்றத்தில்தான் சொல்ல முடியும்’’ என்று பதிலளித்தது மத்திய அரசுத் தரப்பு.
இந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்க்கப்பட வேண்டிய வழக்கே அல்ல. உறங்கிக் கொண்டிருந்த என்னை நள்ளிரவில் எழுப்பிக் கொண்டு வந்துவிட்டார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் ஆணைகளை உச்ச நீதிமன்றம் உடனடியாக திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. எனவே இந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டதே தவறு. அரசியல் அமைப்புச் சட்டம் 164-ன்படி ஆளுநர் அதன் அரசியல் சாசன கடமையை செய்வதை யாரும் தடுக்க முடியாது என்றார் ரோத்தகி.
இரு தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘’கர்நாடக ஆளுநர் முதல்வராக பதவியேற்குமாறு எடியூர்ப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்த் செய்ய முடியாது. ஆனாலும் இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. பிறகு விசாரிப்போம்’’என்று கூறி வழக்கு விசாரணையை முடித்தனர்.
இதனையடுத்து ராஜ் பவனில் இன்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பதவியேற்ற எடியூரப்பா கடவுள் மற்றும் பெயரால் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். எடியூரப்பா பதவியேற்பை முன்னிட்டு பெங்களூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து தற்போது காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கிளம்பியதால் பெங்களூரில் பதற்றம் நிலவுகின்றது.

  Source : justknow.in
Post Date : 17-05-18
Total Visitors : 172
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments