Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நீட் கேள்வித்தாள் குளறுபடி: நாடு முழுவதும் 16-ம் தேதி தொடங்க இருந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தம்

நீட் கேள்வித்தாள் குளறுபடி: நாடு முழுவதும் 16-ம் தேதி தொடங்க இருந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தம்நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து வரும் 16,17, மற்றும் 18 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் நடக்கவிருந்த 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 6-ம் தேதி நடந்தது. தமிழ்நாட்டில் இந்த தேர்வை 1,07,288 பேர் எழுதினர். தமிழில் மட்டும் 24 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை.
மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதத்தில் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவில் ஒதுக்கீட்டின்படி மத்திய மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தும். இதற்கான முதல் கட்ட கவுன்சலிங் ஏற்கனவே முடிந்து விட்டது. 2ம் கட்ட கவுன்சலிங் நடத்துவதற்கான பட்டியல் நேற்று வெளியிடுவதாக இருந்தது.
இதற்கிடையில், மதுரை நீதிமன்ற உத்தரவினால், தரவரிசைப்பட்டியலை சிபிஎஸ்இ மாற்றினால் எல்லா மாநிலங்களிலும் அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கை மீண்டும் நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தமிழில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு கணிசமான அளவில் மருத்துவ சீட் கிடைப்பதற்கான சூழல் உருவானது.
இந்த நிலையில் மத்திய மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் வரும் 16,17,18 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் தரப்பில் இருந்து நேற்று ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,” நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதில் மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும். இதைத்தவிர தமிழகத்தில் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் தனியார் கல்லூரிகளின் கலந்தாய்வும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநர் செல்வராஜன் வெளியிட்ட அறிக்கையில்; உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக 16, 17, 18ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த கவுன்சலிங் ரத்து செய்யப்படுகிறது. தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங் வேறு தேதியில் நடத்தப்பட உள்ளது. அதற்கான நாள் மருத்துவக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எவ்வாறு மேல்முறையீடு செய்வது என்பது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் அதன் மூத்த அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் தவறு நடந்திருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் பட்சத்தில் அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தால் அது மிகப்பெரிய பிரச்னையாக அமைந்து விடும்.
எனவே இந்த பிரச்னையை எவ்வாறு தீர்க்கலாம் என்ற கோணங்களில் தீவிர ஆலோசனைகளில் சிபிஎஸ்இ நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதைத்தவிர மருத்துவ கவுன்சலிங்கை நடத்தி வரும் சுகாதாரத்துறையிடம் மத்திய மனிதவளத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் இறுதியாக சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தனது அப்பீல் மனுவில் 2018-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு குறிப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்ட திட்டமிட்டுள்ளது. அந்த தகவல் தொகுப்பில், ‘‘மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும். ஒன்று மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழி மாற்றத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவிகிதம் போக மீதமுள்ள இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3501 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
இது தவிர அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்களும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 600-ம் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. மருத்துவ படிப்பை பொறுத்த வரையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 44
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments