Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நீட் தேர்வு குளறுபடி:உயர்நீதிமன்ற திருப்பு முனை தீர்ப்பினை சி.பி.எஸ்.இ.உடனடியாக அமல்படுத்த வேண்டும்-செங்கோட்டையன்

நீட் தேர்வு குளறுபடி:உயர்நீதிமன்ற திருப்பு முனை தீர்ப்பினை சி.பி.எஸ்.இ.உடனடியாக அமல்படுத்த வேண்டும்-செங்கோட்டையன்நீட் தேர்வு குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்த திருப்பு முனை தீர்ப்பினை சி.பி.எஸ்.இயும், மத்திய அரசும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி மரக்கடை அருகே உள்ள சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், அறிவியல் மையத்தையும் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘வருங்காலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் தனியாருக்கு இணையாக புதிய சீருடைகள் வழங்கப்படும். தமிழகத்தில் விளையாட்டு மைதானம் இல்லாத அனைத்து அரசு பள்ளிகளிலும், விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மாணவ, மாணவிகள் காலை பள்ளிகளுக்கு வந்தவுடன், அவர்களுக்கு 20 நிமிடம் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலுச்சாமிக்கு அமைச்சர் செங்கோட்டையன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.விழாவில் அமைச்சர் வளர்மதி, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, ரத்தினவேல் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில், மண்டல அளவில் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து சிறப்பாக செயல்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 38 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுகளையும், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாக செயல்பட்ட 5 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், ‘நீட்’ தேர்வு தமிழ் கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற திருப்பு முனை தீர்ப்பினை மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கி உள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டியது மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.யும் தான். அதன்பிறகு தான் முதல்வரும், துணை முதல்வரும் பள்ளிக்கல்வி துறை மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்து அறிவிப்பார்கள்.
எங்களை பொறுத்தவரை நமக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு கொண்டு வருகிற எந்த போட்டித்தேர்வாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து வருகிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சியை அளித்தோம்.
11-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், 40 சதவீத கேள்விகள் இணைக்கப்பட இருக்கிறது. இந்த கேள்விகளை படிக்கும் மாணவர்கள் சுலபமாக போட்டித்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற முடியும். அடுத்த ஆண்டு 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் வர இருக்கிறது.
இந்த புதிய பாடத்திட்டத்தில் திறன் மேம்பாடு தொடர்பாக 12 பாடங்கள் இடம்பெற்று இருக்கும். பிளஸ்-2 படித்து முடித்தவுடன், அந்தந்த பகுதியில் வேலைக்கு செல்லக்கூடிய வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
25 ஆயிரம் மாணவர்களுக்கு சி.ஏ. எனப்படும் தணிக்கை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சிறந்த தணிக்கையாளர்களை கொண்டு அவர்களுக்கு 500 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த திட்டம் 12-ந்தேதி (நாளை) கோபிச்செட்டி பாளையத்தில் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாற்றப்பட்டு விடும். மூன்றாண்டுகளில் முடிக்கப்படவேண்டிய ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும் இரண்டே ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது.
மாணவர்கள் பாடங்களை நல்ல முறையில் எளிதாக கற்றுக்கொள்வதற்கு வசதியாக செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு, படிப்பதற்கான வசதி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியில் எங்காவது இருக்கும் போதோ கூட பாடங்களை புத்தகமே இல்லாமல் படிக்க முடியும். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சென்ற பின்னர், இந்தியா முழுவதும் அமல்படுத்துவதாக உறுதியளித்து இருக்கிறார்கள்.தமிழகத்தில் 762 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஒமேகா ஹெல்த் கேர் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் அமைக்கப்பட்ட அறிவியல் ஆய்வகப் பொருட்கள், நடமாடும் அறிவியல் நூலக ஊர்தி ஆகியவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டவர்களையும், கொடையாளர் மற்றும் பெரும் புரவலர்களையும் பாராட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், அரசு சையது முர்துஸா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலுச்சாமி, மாவட்ட மைய நூலக அலுவலர் ஆ.பொ.சிவக்குமார், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆ.கருப்பசாமி, வாசகர் வட்ட தலைவர் புலவர் கோவிந்தசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 11-07-18
Total Visitors : 65
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments